செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லை மாவட்டத்தில் பாதிப்பில் புதிய உச்சம்: போலீஸ்காரர்கள்-டாக்டர் உள்பட 269 பேருக்கு கொரோனா

Published On 2021-04-17 11:28 GMT   |   Update On 2021-04-17 11:28 GMT
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 2 போலீஸ்காரர்களுக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

மருத்துவமனை ஊழியர்கள், காவல்துறையினர், இஸ்ரோ மைய ஊழியர்கள், சிறுவர்- சிறுமிகள் என அனைத்து தரப்பினருக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது.

இன்று இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக 269 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. நெல்லையில் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட 2,168 பரிசோதனையில் 233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1935 பேருக்கு தொற்று ஏற்படவில்லை.

தொடர்ந்து மாநகர பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 155 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பாளையில் 30 பேருக்கும், வள்ளியூரில் 34 பேருக்கும், களக்காட்டில் 15 பேருக்கும், அம்பையில் 13 பேருக்கும், மானூரில் 9 பேருக்கும், சேரன்மகாதேவியில் 5 பேருக் கும், நாங்குநேரியில் 4 பேருக்கும், பாப்பாக்குடி, ராதாபுரத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மேலும் தூத்துக்குடியை சேர்ந்த 6 பேருக்கும், தென்காசியை சேர்ந்த 3 பேருக்கும், மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவருக்கும் இன்று தொற்று ஏற்பட்டுள்ளது.

பாளையில் மனக்காவலன் பிள்ளை நகரில் 2 பேருக்கும், சாந்தி நகரில் ஒரே தெருவில் 5 பேருக்கும், காந்தி நகரில் 2 பெண்களுக்கும், சமாதானபுரத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கும், சங்கர் நகரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேருக்கும், வீட்டு வசதி வாரியகுடியிருப்பில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பாளை ஆயுதப்படை குடியிருப்பில் ஒரே வீட்டில் முதியோர் மற்றும் 6 வயது சிறுவன், 2 வயது சிறுமி ஆகியோருக்கும், பாலபாக்யா நகரில் ஒரே வீட்டில் 2 சிறுவர்களுக்கும், தச்சநல்லூரில் ஒரே குடியிருப்பில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேருக்கும், கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் ஒரு ஊழியருக்கும், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது தவிர காவல்கிணற்றில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 12 பேருக்கும், செட்டிகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 5 பேருக்கும், மாநகர பகுதியில் ஒரு டாக்டருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் கொத்து கொத்தாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 2 போலீஸ்காரர்களுக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம் அங்கு ஒரு பெண் போலீசுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News