செய்திகள்
குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே விட்டுச் சென்ற சங்கீதா மற்றும் அவரது கணவர் ஜெயசந்திரன்.

பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் விட்டு சென்ற தாய்

Published On 2021-04-17 10:35 GMT   |   Update On 2021-04-17 10:35 GMT
ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் 3-வது பிறந்த பெண் குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே விட்டுச் சென்ற பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி குரும்பபட்டியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 30). இவரது மனைவி சங்கீதா (24). இவர் கருவுற்ற நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 1½ கிலோ எடையில் பிறந்த அந்த குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே அவர் விட்டு விட்டு சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து குழந்தை அழத் தொடங்கியது. சங்கீதாவை ஆஸ்பத்திரி ஊழியர்கள் தேடிய போது கிடைக்கவில்லை. அவர் வைத்திருந்த பொருட்களும் இல்லாமல் போனதால் அவர் வீட்டுக்கு சென்று விட்டது தெரியவந்தது. இதனையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்பத்திரியில் அவர் அளித்த முகவரியை வைத்து அந்த பெண்ணின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது அவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் 3-வது குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது என்றும், அதனை காப்பகத்தில் சேர்த்து விடுமாறும் கூறினார். கணவர் ஜெயசந்திரனின் வருமானம் தங்களுக்கு பற்றாக்குறையாக இருப்பதால் 3-வதாக பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாது என்று தெரிவித்தார். இதனையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் ஜெயசந்திரன் குடும்பத்தினரிடம் முறையாக எழுதி வாங்கிக் கொண்டனர்.

மேலும் குழந்தை எடை குறைவாக இருப்பதால் அரசு ஆஸ்பத்திரியிலேயே வைத்து சிகிச்சை அளிக்கவும் அதன் பிறகு காந்திகிராமத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கவும் சமூக நலத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இருப்பினும் பச்சிளம் குழந்தையை கேட்பாரற்ற நிலையில் கைவிட்டுச் சென்ற சங்கீதா மீது சமூக நலத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News