செய்திகள்
கோப்புபடம்

மேலும் 2 லட்சம் தடுப்பூசி இன்று இரவு வருகிறது - சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

Published On 2021-04-17 07:52 GMT   |   Update On 2021-04-17 07:52 GMT
கொரோனா தொற்று வேகமாக பரவுவதால், அனைத்து மாவட்டங்களிலும் முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

சென்னை:

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.

சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிற நோய் பாதிப்பு உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொற்று வேகமாக பரவுவதால், அனைத்து மாவட்டங்களிலும் முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதனால் ஒருசில மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டிய பொதுமக்கள் தற்போது ஆர்வம் காட்டுகிறார்கள். தொடக்கத்தில் 4 ஆயிரம், 5 ஆயிரம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இப்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக மையங்களுக்கு தாமாகவே தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அங்குள்ள வயது பிரிவின் அடிப்படையில் தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது.

ஒருசில மையங்களில் ஒதுக்கப்பட்டுள்ள அளவை விட கூடுதலாக மக்கள் வந்ததால் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது 5 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. இது 3 நாட்களுக்கு போதுமானது.

இன்று இரவு மேலும் 2 லட்சம் தடுப்பூசிகள் வருகின்றன. இது தவிர மத்திய அரசிடம் கேட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசிகளும் தேவைக்கேற்ப படிப்படியாக வர உள்ளது.

பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு அனைத்து மாவட்டத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தடுப்பூசியை அதிக நாட்களுக்கு இருப்பு வைக்க முடியாது. 4 அல்லது 5 நாட்களுக்கு தேவையான அளவில் இருப்பு வைக்கப்படுகிறது. அந்த அளவை கணக்கிட்டு தடுப்பூசி மத்திய தொகுப்பில் இருந்து விநியோகிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News