செய்திகள்
கோப்புபடம்

மதுரை மாவட்டத்தில் இதுவரை 1¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-04-17 04:54 GMT   |   Update On 2021-04-17 04:54 GMT
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அர்ஜூன்குமார் தெரிவித்தார்.

மதுரை:

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வீசி வருகிறது. நாளுக்கு நாள் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

முககவசம், கிருமி நாசினி மூலம் கை கழுவுதல், சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்தி உள்ளது.

அதன்படி கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரி, சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசியை போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக மதுரையில் கடந்த 14-ந் தேதி முதல் நேற்று (16-ந் தேதி) வரை தடுப்பூசி திருவிழா நடந்தது.

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மதுரை மாவட்டத்தில் 207 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இதுவரை 1 லட்சத்து 81 ஆயிரத்து 213 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அர்ஜூன்குமார் தெரிவித்தார்.

மேலும் இதனை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 88 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்றார்.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் 2 ஆயிரம் பேருக்கும், பேரையூர் அரசு மருத்துவமனையில் 900 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சில இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் நாள் தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம்.

நேற்றைய தகவலின்படி மாவட்ட சுகாதாரத்துறையிடம் 2,600 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாட்டை நீக்க மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதற்கிடையே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பொதுமக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் எழுந்துள்ளது.

இதன் காரணமாக தடுப்பூசி போட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News