செய்திகள்
கொரோனா வைரஸ்

திருச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 1,200 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-16 09:17 GMT   |   Update On 2021-04-16 09:17 GMT
திருச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த 7 தினங்களில் 1,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாவட்டத்தில் சராசரி பாதிப்பு விகிதம் 5.5 ஆக இருக்கிறது.

திருச்சி:

திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்றைய பரிசோதனை முடிவில் 241 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர் திருச்சி மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். 30 சதவீதம் பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த 7 தினங்களில் 1,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாவட்டத்தில் சராசரி பாதிப்பு விகிதம் 5.5 ஆக இருக்கிறது. கடந்த ஒரே வாரத்தில் பாதிப்பு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. திருச்சியில் கடந்த மாத தொற்று பாதிப்பு சதவீதம் 0.7 ஆக இருந்தது. இது சென்ற வாரம் 2.29 சதவீதமாக உயர்ந்து தற்போது 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பாதிப்பு விகிதம் 9.9 சதவீதமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,000 பேருக்கு பரிசோதனை செய்தால் அதில் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நோய் அறிகுறி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பாதிப்பு வேகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நாகப்பட்டினம் உள்ளது.

நேற்றைய பரிசோதனை முடிவில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 821 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 241 பேருக்கும், தஞ்சாவூரில் 166 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 134 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 125 நபர்களுக்கும் தொற்று உறுதியானது. மேலும் கரூர்- 53, அரியலூர்-29, புதுக்கோட்டை-62, பெரம்பலூர்- 11 என தொற்றாளர்கள் வந்துள்ளனர்.

தினமும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருப்பதால் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டுகள் நிரம்பி வழிகின்றன. நாகப்பட்டினத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாகப்பட்டினம், வேதாரண்யம் மற்றும் இதர நகரங்களில் உள்ள ஓட்டல்கள், விடுதிகள் போன்றவற்றை தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வைரசின் வீரியம் அதிகமாக இருப்பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தாக்கம் மேலும் சில வார காலம் இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே பொது மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றி தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News