செய்திகள்
திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை 15ஆக உயர்வு

Published On 2021-04-16 07:24 GMT   |   Update On 2021-04-16 11:23 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் நேற்று மேலும் 233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மண்ணரையை சேர்ந்த 46 வயது ஆண் கொரோனாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் அவரது உடலை தகனம் செய்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 231ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 863 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதுடன், கிருமி நாசினி தெளித்து தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி வெள்ள கோவில் உப்புபாளையம், நரசிம்மா மில், கன்னிவாடி காதகோட்டை தனியார் மில் பகுதி, ஊத்துக்குளி கவுண்டம்பாளையம், அவினாசி நியூ டவுன், உடுமலை காந்தி சந்து, சீனிவாசா தெரு, 15 வேலம்பாளையம் காளியம்மன் கோவில் தெரு, பொங்கலூர் கோவிந்தபாளையம், தாராபுரம் ஜவுளிக்கடை தெரு, உடுமலை ராமசாமி நகர், சத்திரம் தெரு, பெரிச்சிப்பாளையம் அம்மனி அம்மாள் லே அவுட், திருப்பூர் வி.ஜி.வி. கார்டன், பூச்சுகாடு கிரிநகர் உள்ளிட்ட 15 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News