செய்திகள்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்

திருப்பூர் மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு

Published On 2021-04-15 10:17 GMT   |   Update On 2021-04-15 10:17 GMT
திருப்பூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை வரும் நாட்களில் உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் 225 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா 2-வது அலை தொடங்கி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக பதிவாகி இருக்கிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர், கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 509 ஆக இருக்கிறது.

திருப்பூரை சேர்ந்த 55 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான வர்களின் எண்ணிக்கை 231 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 1457 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பரவல் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் வீதியில் நடமாடும் போது முககவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை வரும் நாட்களில் உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வதந்திகளை நம்பாமல் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதே வேளையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் மறக்காமல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

கொரோனா பாதிப்பு மாவட்ட பட்டியலில் திருப்பூர் பின் தங்கியிருந்தது.

நேற்று பாதிப்பு 200-ஐ கடந்ததால் தொற்று பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள் பட்டியலில் 6-வது இடத்துக்கு திருப்பூர் வந்து விட்டது.

கடந்த 5 நாட்களுக்கு முன் வரை 20 இடங்களுக்குள் இருந்த திருப்பூர் மாவட்டம் நேற்று மாநில அளவில் 6-வது இடத்துக்கு வந்தது மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags:    

Similar News