செய்திகள்
வேப்பனப்பள்ளி பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறைகாற்றுடன் கனமழை

Published On 2021-04-15 05:38 GMT   |   Update On 2021-04-15 05:38 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நேற்று மழை பெய்தது.
தருமபுரி:

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது.

இதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் பலத்த சூறைக்காற்று, இடியுடன் கனமழை பெய்தது. தருமபுரி, பாலக்கோடு, நல்லம்பள்ளி, தொப்பூர், கடத்தூர், மொரப்பூர், இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை மழை பெய்தது.

தருமபுரியில் நேற்று இரவு சூறைக்காற்று வீசியது. இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இதேபால் தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு அடுத்துள்ள மாரண்டஹள்ளி, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஹள்ளி, வீரசானூர் உள்ளிட்ட பகுதிகளில், 40 நிமிடத்துக்கு மேல் மழை பெய்ததால், வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை மாறியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, அடிலம், அனுமந்தபுரம், பொம்மஅள்ளி, கெரகோடஅள்ளி, நாகணம்பட்டி உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் தொடங்கியது. முதல் வெயிலின் தாக்கம் 104 டிகிரிக்கும் மேல் இருந்து வந்தது. கோடைகால வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நேற்று மழை பெய்தது.

ஓசூர் பகுதி நல்ல மண்வளம், சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளதால், இங்கு அதிக அளவில் காய்கறிகள், ரோஜா மலர், கீரை வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பசுமை குடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாறி கடந்த 3 நாட்களாக கடும் வெயில் வாட்டி எடுத்தது.

இதனால் பொதுமக்கள் மதியத்திற்கு மேல் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. மேலும் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில், நேற்று காலை முதலே வானம் கருமேகத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணியளவில், திடீரென மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள தோட்டத்தின் மீது படர்திருந்த புற்கள் மீது ஜஸ் கட்டி பரவிக் கிடந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல தேன்கனிக்கோட்டை பகுதியிலும் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று மழை பெய்ததால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News