செய்திகள்
கொரோனா வைரஸ்

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியருக்கு கொரோனா

Published On 2021-04-13 09:43 GMT   |   Update On 2021-04-13 09:43 GMT
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியராக இருப்பவர் விஜயன் (வயது 48). இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கும்பகோணம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பணிபுரிந்தார். இதையொட்டி தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் வாக்கு எண்ணும் மையத்திலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என கண்காணித்து வந்தார். தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் சம்பந்தமான பணி செய்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விஜயனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து அவர் கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்தார். அதில் இன்று காலை வந்த முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கும்பகோணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் அவருடன் பணிபுரிந்த மற்ற பணியாளர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதேப்போல் கும்பகோணம் பகுதியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே கும்பகோணம் நகரில் சோலையப்பன் தெரு, ஜெ.பி.கீழவீதி, துவரங்குறிச்சி ஆகிய 3 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News