செய்திகள்
குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.84 லட்சத்தை போலீசார் பைகளில் வைத்து கொண்டு சென்ற காட்சி.

ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் குடோனில் ரூ.84 லட்சம் பறிமுதல்

Published On 2021-04-04 06:06 GMT   |   Update On 2021-04-04 06:06 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 27-க்கும் மேற்பட்டோரை வரவழைத்து அவர்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
ராணிப்பேட்டை:

தமிழக சட்டசபை தேர்தல் 6-ந்தேதி நடக்கிறது. இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. ஓட்டுக்கு பணம் பட்டுவாடா அதிகளவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை அடுத்த வாணாபாடி பகுதியில் உள்ள வசந்த் ஆவன்யூவில் ராணிப்பேட்டை அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் என்பவர் குடோனில் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக கலெக்டர் அலுவலக கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசி மூலம் நேற்று இரவு தகவல் வந்தது.

இதனையடுத்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் மற்றும் டி.எஸ்.பி. பூரணி, தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் இரவு 11 மணியளவில் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த குடோனில் இருந்து வாலிபர் ஒருவர் சுவர் ஏறி குதித்தார். அதை பார்த்த அதிகாரிகள் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

குடோனுக்குள் சென்று சோதனை நடத்தினர். அங்கு மேலும் 26 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அனைவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் குடோனுக்கு பின்புறம் உள்ள முட்புதரில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். முட்புதரில் 3 பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணத்தை கணக்கிட்டதில் அதில் ரூ.84 லட்சம் இருந்தது தெரியவந்தது. பணத்தை அதிகாரிகள் மீட்டு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அதிகாலை 4.30 மணி வரை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 27-க்கும் மேற்பட்டோரை வரவழைத்து அவர்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 27 ஆந்திர வாலிபர்களை பிடித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளரின் குடோனில் ரூ.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News