செய்திகள்
கோப்புபடம்

மத்திய அரசு அதிகாரி மனைவியிடம் ரூ.2½ கோடி நூதன மோசடி - டெல்லி கும்பல் கைது

Published On 2021-04-04 03:44 GMT   |   Update On 2021-04-04 03:44 GMT
சென்னையில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி மனைவியிடம் ரூ.2½ கோடி நூதன மோசடியில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:

சென்னை மந்தைவெளி, திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதாஸ்ரீதரன் (வயது 67). ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். இவரது கணவர் ஸ்ரீதரன் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் இறந்து விட்டார். அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை சுதா ஏற்கனவே வாங்கி விட்டார்.

இந்த விவரங்களை தெரிந்து கொண்ட டெல்லியில் செயல்பட்ட மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களது மோசடி விளையாட்டை தொடங்கினார்கள். சுதா நன்றாக இந்தி பேசுவார். அதை வைத்து டெல்லி மோசடி கும்பல் சுதாவிடம் போனில் தொடர்பு கொண்டு இந்தியில் பேசி தங்களது மோசடி லீலைகளை அரங்கேற்றியது.

சுதாவிடம் பேசிய டெல்லி மோசடி ஆசாமிகள், உங்கள் கணவருக்கு மேலும் ரூ.19 லட்சம் இன்சூரன்ஸ் பணம் வரவேண்டி உள்ளது. அதை நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி ஆசிரியை சுதாவும், அதற்காக மோசடி நபர்கள் சொன்னபடி ஆன்லைனில் விண்ணப்பித்தார்.

ரூ.19 லட்சம் வாங்குவதற்கு முன்பணம் கட்ட வேண்டும் என்றும், அதை திருப்பி தந்து விடுவார்கள் என்றும் சுதாவிடம் பேசிய மோசடி நபர்கள், கொஞ்சம், கொஞ்சமாக ரூ.2½ கோடி வரை சுருட்டி விட்டனர். திருப்பி கிடைத்து விடும் என்ற எண்ணத்தில் சுதாவும், மோசடி நபர்கள் கேட்ட பணத்தை எல்லாம் கொடுத்து விட்டார். ஒரு கட்டத்தில் மோசடி நபர்கள் சுதாவிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். அதன் பிறகுதான் சுதாரித்துக்கொண்ட சுதா, எல்.ஐ.சி. நிறுவனத்தில் நேரில் சென்று விசாரித்தார். மோசடி கும்பல் சொன்னது அத்தனையும் பொய் என்று தெரியவந்தது. நூதன முறையில் டெல்லி கும்பல், சுதாவை ஏமாற்றி விட்டனர். மோசடி ஆசாமிகள், எல்.ஐ.சி. நிறுவனத்தில் இருந்து பேசுவது போல பேசி இந்த மோசடி லீலைகளை அரங்கேற்றி உள்ளனர்.

தான் மோசம் போனது பற்றி, ஆசிரியை சுதா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் வித்யா ஜெயந்த்குல்கர்னி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

டெல்லிக்கு சென்று முகாமிட்டு கடந்த 1 மாதமாக நடத்திய விசாரணையில், இந்த மோசடிக்கு எல்.ஐ.சி. நிறுவன ஊழியர்கள் சிலர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. மேலும் மோசடி கும்பலைச் சேர்ந்த டெல்லி ஆசாமிகள் 6 பேரையும் கைது செய்தனர்.

கைதான 6 பேர்கள் பெயர் விவரம் வருமாறு:- 1.அமன்பிரசாத் (29), 2.பிரதீப் குமார் (29), 3.மனோஜ்குமார் (44), 4.குபீர்சர்மா (27), 5.ஹீமன்ஸ் தாஹி (25),

6.ராம்பால் (30) இவர்கள் அனைவரும் டெல்லி உத்தம்நகர் பகுதியைச் சேர் ந்தவர்கள். இவர்களை சென்னை அழைத்து வந்த தனிப்படை போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

குற்றவாளிகளை கைது செய்த உதவி கமிஷனர் பிரபாகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், சுரேஷ்குமார் உள்ளிட்ட தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
Tags:    

Similar News