செய்திகள்
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக நிர்வாகிகள் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Published On 2021-03-30 08:38 GMT   |   Update On 2021-03-30 08:38 GMT
அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டி மற்றும் தேர்தல் பணி உள்ளிட்ட காரணத்தாலும் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகின்ற காரணத்தாலும் திருவள்ளுர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் ஆர்.லட்சுமி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் முனைவர் நெல்லை கு.சடகோபன்.

கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளரை எதிர்த்து தேர்தல் பணியாற்றுகின்ற காரணத்தினால் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்.பி. வி.ஏழுமலை, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி தெற்கு (கிழக்கு) ஒன்றிய துணை செயலாளர் ஈஸ்வரி ஈஸ்வரசாமி, குடிமங்கலம் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஏ.நாகராஜ், ஆத்துக்கிணத்துப்பட்டி ஊராட்சி முன்னாள் செயலாளர் எம்.ரங்கசாமி, சோம வாரப்பட்டி கமல்ஹாசன், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கம்ம கண்டிகை கிளை செயலாளர் கே.ஸ்ரீதர் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

அ.தி.மு.க.வினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News