செய்திகள்
காயல்பட்டினம் அலியார் தெருவில் குளம் தேங்கி கிடக்கும் தண்ணீர்.

தூத்துக்குடி-தென்காசி மாவட்டங்களில் திடீர் மழை

Published On 2021-03-27 05:16 GMT   |   Update On 2021-03-27 05:16 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அளவு சற்று அதிகரித்துள்ளது.
தென்காசி:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து திடீரென்று மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணைப் பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இதே போல் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், மேலகரம் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. ஏற்கனவே வெயில் வாட்டி வந்ததால் அனைத்து அருவிகளிலும் மிகக்குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்தது. இன்று காலை நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அளவு சற்று அதிகரித்துள்ளது.

விடுமுறை நாளான இன்று குற்றால அருவிகளில் குளிக்க அதிக சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஏற்கனவே கடும் வெயில் காரணமாக அதிக வெப்பத்தால் அவதிப்பட்ட மக்கள் குறைந்த அளவு விழுந்த தண்ணீரிலும் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி மாநகர பகுதி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது. இன்று அதிகாலை காயல்பட்டினம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 10.4 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

நெல்லை மாநகரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று அதிகாலை லேசான சாரல் மழை பதிவானது. எனினும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணைநீர் மட்டம் இன்று காலை 96.95 அடியாகவும், 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 110.60 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர் மட்டம் 120.60 அடியாகவும், 85 அடி உயரம் கொண்ட கடனாநதி நீர்மட்டம் 71.40 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் 68 அடியாகவும், கருப்பாநதி அணை நீர் மட்டம் 56.11 அடியாகவும், குணடாறு நீர் மட்டம் 31.12 அடியாகவும், அடவி நயினார் அணை நீர் மட்டம் 46 அடியாகவும், வடக்கு பச்சையாறு நீர் மட்டம் 44.30 அடியாகவும் உள்ளது.
Tags:    

Similar News