செய்திகள்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

ஆத்தூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் படுத்து போராட்டம்

Published On 2021-03-20 17:42 GMT   |   Update On 2021-03-20 17:42 GMT
ஆத்தூரில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சின்னதுரை வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக ஆத்தூருக்கு ஏராளமான தி.மு.க.வினர் வந்து கொண்டிருந்தனர். அப்போது புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி என்பவருக்கும் அந்த வழியாக வாகனங்களில் வந்த சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தன்னை சிலர் தாக்கியதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் எனவும் கூறி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி நடுரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் விரைந்து வந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி அங்கிருந்து எழுந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி வேட்பாளர் சின்னதுரை கூறியதாவது:-

சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நேரத்தில் நான் கட்சியினருடன் தாசில்தார் அலுவலகம் அருகே இருந்தேன். இந்த சம்பவம் பற்றி எனக்கு தெரியாது. வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னர் தான் இதுபற்றி எனக்கு தெரியவந்தது. அவரை தி.மு.க.வினர் யாரும் தாக்கவில்லை என்று கட்சியினர் என்னிடம் தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் எதிரொலியாக போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவியை சேலம் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாறுதல் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News