செய்திகள்
புகார்

திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயம்- நஷ்டஈடு கேட்டு போலீசில் மாப்பிள்ளை வீட்டார் புகார்

Published On 2021-03-04 03:08 GMT   |   Update On 2021-03-04 03:08 GMT
திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயமானார். இதனால் திருமணத்துக்காக மணப்பெண்ணுக்கு செய்த செலவுகளை நஷ்டஈடாக தரும்படி மாப்பிள்ளை வீட்டார் போலீசில் புகார் செய்து உள்ளனர்.
பூந்தமல்லி:

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், மதுராந்தகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இவர்களின் திருமணம் நேற்று நசரத்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிட்டு இருவீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கினர். முன்னதாக இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற இருந்தது.

திருமண கனவுகளுடன் மணமகனும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் திருமண மண்டபத்துக்கு வந்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு அறுசுவை விருந்தும் தயாரானது.

ஆனால் நீண்டநேரமாகியும் மணப்பெண் வீட்டார் யாரும் திருமண மண்டபத்துக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார், மணப்பெண் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டபோது, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகு நிலையம் சென்று வருவதாக கூறிச்சென்ற மணப்பெண் அதன்பிறகு மாயமாகி விட்டதாக தெரிவித்தனர்.

மணப்பெண் மாயமான தகவல் கேட்டு மணமகன் மற்றும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். திருமண வரவேற்பு நின்றதால், மணமக்களை வாழ்த்த வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சிக்காக களை கட்டி இருந்த திருமண மண்டபம் களை இழந்தது. அங்கு வைத்து இருந்த வாழ்த்து பேனர்களையும் கிழித்து எறிந்தனர். மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணப்பெண் மாயமானதால், மணமகளுக்கு எடுத்து கொடுத்த நகை, பட்டுப்புடவைக்கான பணம், வரவேற்பு நிகழ்ச்சிக்கு விருந்து வைக்க செய்த செலவு உள்ளிட்டவைகளை பெண் வீட்டார் நஷ்டஈடாக தரும்படி கேட்டு நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் மணமகன் வீட்டார் புகார் அளித்தனர்.

திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணப்பெண் மாயமானதால் வரவேற்பு மற்றும் திருமணம் நின்றுபோன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News