செய்திகள்
எம்.ஜி.ஆர். சிலை தீப்பற்றி எரிந்த காட்சி.

தி.மு.க.வினர் பட்டாசு வெடித்ததில் எம்.ஜி.ஆர். சிலை தீப்பிடித்து எரிந்தது- அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

Published On 2021-03-02 01:57 GMT   |   Update On 2021-03-02 01:57 GMT
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தபோது எம்.ஜி.ஆர்.சிலையில் தீப்பொறி பட்டு சிலை தீப்பிடித்து எரிந்தது. இதனால் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில், மெயின் ரோடு அருகே எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. தேர்தல் காரணமாக அந்த சிலை துணியால் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கந்திலி ஒன்றிய தி.மு.க. சார்பில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அந்தப்பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது, தீப்பொறி பறந்து எம்.ஜி.ஆர். சிலை மூடப்பட்டிருந்த துணி மீது விழுந்து தீ பிடித்தது. இதில் மளமளவென தீ பரவி சிலை முழுவதும் எரிந்தது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து சிலை மீது ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் சிலை மீது இருந்த பெயிண்டுகள் மீது தீப்பிடித்து சிலை முழுவதும் கருப்பாக காட்சி அளித்தது.

இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள் எம்.ஜி.ஆர். சிலை தீ பிடிப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News