செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை

தொடக்கக்கல்வி ஆசிரியர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை- மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2021-02-26 13:21 GMT   |   Update On 2021-02-26 13:21 GMT
தொடக்கக்கல்வி ஆசிரியர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை:

புதுக்கோட்டை ஆவுடையார்கோவிலை சேர்ந்த சண்முகநாதன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கும். முதலில் பொது இடமாறுதல் கலந்தாய்வும் பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.

பொது இடமாறுதல் கலந்தாய்வை நடத்தாமல், பதவி உயர்வால் பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பிப்ரவரி 18-ந்தேதி தொடக்கக்கல்வி இயக்குனர் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதனால் பணியிட மாறுதல் பெறும் ஆசிரியர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே தொடக்கக் கல்வி நிலையில் பதவி உயர்வு கலந்தாய்வு மூலமாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின்னரே பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தொடக்கக்கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News