செய்திகள்
சண்டை சேவல்

சண்டை சேவல் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் உடுமலை இளைஞர்கள்

Published On 2021-02-25 10:03 GMT   |   Update On 2021-02-25 10:03 GMT
கட்டுச்சேவல் மற்றும் பந்தயச்சேவல் எனப்படும் சண்டைச்சேவல் வளர்ப்பில் உடுமலை பகுதி இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை:

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. அத்துடன் விவசாயம் சார்ந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் வளர்ப்பிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் அரசு கால்நடைத்துறை சார்பில் கிராமப்புற பெண்களுக்கு நாட்டுக்கோழிக் குஞ்சுகளை இலவசமாக வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது நாட்டுக் கோழிக்கறிக்கு மவுசு கூடியுள்ளதால் நல்ல விலை கிடைக்கிறது.

இது கிராமப்புற மக்களிடையே கோழி வளர்ப்பை ஊக்குவித்து வருகிறது. மேலும் கட்டுச்சேவல் மற்றும் பந்தயச்சேவல் எனப்படும் சண்டைச்சேவல் வளர்ப்பில் உடுமலை பகுதி இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கென குறிப்பிட்ட ரக சேவல்களை தேர்வு செய்து சண்டைப்பயிற்சியளித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் உடுமலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமல்லாமல் தாராபுரம், பழனி, பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த சண்டைக்கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும் வாரந்தோறும் உடுமலை சந்தைக்கு வருகின்றனர்.

சண்டைச்சேவல்கள் தவிர இறைச்சிக்காகவும் நாட்டுக்கோழிகளை இங்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று உடுமலை சந்தையில் சேவல்களை விற்பனை செய்து கொண்டிருந்த விற்பனையாளர்கள் கூறியதாவது:

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் சேவல் சண்டையும் ஒன்றாகும். சண்டைச் சேவல்களில் கத்தி கட்டாமல் சண்டைக்கு விடக்கூடிய வெத்துக்கால் சேவல்கள், கத்தி கட்டு சேவல்கள் மற்றும் அழகுக்காக வளர்க்கப்படும் வால் சேவல்கள் என்று 3 வகை உள்ளது. தற்போது சேவல் சண்டை நடத்துவதற்கு பல்வேறு கெடுபிடிகள் உள்ளது.

கத்திகட்டு சேவல்களை சண்டையில் பயன்படுத்த அனுமதியில்லை. இதனால் வெத்துக்கால் சேவல்கள் வளர்ப்பில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறோம். சேவல்களின் உருவ அமைப்பு, நிறம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு செங்காகம், கீரி, மயில், ஆந்தை, கிளி மூக்கு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

சந்தைக்கு கொண்டு வரப்படும் சேவல்களை மோதவிட்டுப் பார்த்து அதனடிப்படையில் விலை பேசி முடிக்கிறோம். இங்கு கொண்டு வரப்படும் சண்டைச் சேவல்களைப் பொறுத்தவரை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விலை போகிறது.

இதுதவிர தேர்ந்த பயிற்சியாளர்களால் பயிற்சியளிக்கப்பட்ட சேவல்கள் இதைவிட பல மடங்கு அதிக விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அவற்றை பெரும்பாலும் நேரடியாக வீடுகளைத் தேடிச்சென்று வாங்கிச்சென்று விடுவதால் அவை சந்தைக்கு கொண்டு வரப்படுவதில்லை.

மேலும் சிறந்த ரக சேவல்களை இனப்பெருக்கம் செய்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனாவின் தாக்கத்துக்குப்பிறகு கோழிச்சந்தையில் விற்பனை பெரிய அளவில் இல்லை. இருந்தாலும் பொங்கல் உள்ளிட்ட விசே‌ஷ தினங்களில் விற்பனை அதிக அளவில் இருக்கும்.

தற்போது 200 முதல் 300 சேவல்கள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சேவல் சண்டைக்கு அங்கீகாரம் வழங்கி பொது இடங்களில் நடத்த அனுமதித்தால் பல மடங்கு விற்பனை அதிகரிப்பதுடன் நமது பாரம்பரிய நாட்டுக்கோழி ரகங்கள் அழியாமல் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News