செய்திகள்
மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க. அரசு அவசரத்தில் அறிவிப்புகளை வெளியிடுகிறது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On 2021-02-25 09:11 GMT   |   Update On 2021-02-25 09:11 GMT
தேர்தலுக்கு சில வாரங்களே இருப்பதால் அ.தி.மு.க. அரசு அவசரத்தில் அறிவிப்புகளை வெளியிடுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி ஒன்றை தமது சமூகவலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால், அ.தி.மு.க. அரசு அவசர கோலத்தில், அலங்கோலமாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

ஒரு இடைக்கால நிதிநிலை அறிக்கையை கொடுத்திருக்கிறது. இதை பார்த்து நிதிநிலையின் கவலைக்கிடமான அறிக்கை என்றுதான் சொல்ல முடியும்.

2015-16 நிதிநிலை அறிக்கையில் 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம் என்று அ.தி.மு.க. அரசு சொன்னது. இதையே ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் கடந்த ஐந்து வருடமாக பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கூறி வருகிறார்கள். ஆனால் ஒரு வருடத்தில் கூட இந்த வளர்ச்சியை எட்ட முடியவில்லை.

மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டு வரியைப் போடுகிறது. இதனால் விலை கூடுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் விலைவாசி உயர்கிறது. மளிகைப் பொருள் விலை உயர்கிறது. காய்கறிகள் விலை உயர்கிறது.

இந்த வரியைக் குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்ல எல்லா விலையும் குறையும். ஆனால் பழனிசாமி அதை செய்ய மாட்டார்.

கடைசி நேரத்தில் காரியத்திற்கு ஆகாத கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்லப் போகிறார்கள்.

கவலைக்கிடமான முறையில் ஒரு நிதிநிலை அறிக்கையை வாசிப்பதை விட பன்னீர்செல்வம் சும்மா இருந்திருக்கலாம். பேப்பர் செலவாவது மிச்சம் ஆகி இருக்கும். இந்த 110 பக்கங்களும் வேஸ்ட்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News