செய்திகள்
கொரோனா வைரஸ்

பழனியில் மேலும் 4 ஆசிரியர்கள், மாணவிக்கு கொரோனா தொற்று- பள்ளி மூடல்

Published On 2021-02-25 08:59 GMT   |   Update On 2021-02-25 08:59 GMT
பழனியில் தொற்று கண்டறியப்பட்ட அரசு பள்ளியில் மேலும் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதால் வகுப்புகள் வேறு இடத்தில் செயல்பட அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
பழனி:

பழனி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் இப்பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் பணிபுரிந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் 64 பேருக்கும் மாணவிகள் 60 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு அந்த அறை மூடப்பட்டது. இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் இன்று வெளிவந்தன. இதில் மேலும் 4 ஆசிரியர்களுக்கும் ஒரு மாணவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இது குறித்து மாவட்ட கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதால் தற்போது பாடம் நடத்தப்பட்ட வகுப்பறைகளை மூடி விட்டு மாணவிகளுக்கு வேறு இடத்தில் பாடங்கள் நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பள்ளியை மூடவும் கல்வி அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவிகள் கூட்டமாக வருவது, முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தது, முக கவசம் அணியாமல் இருந்தது போன்றவையே தொற்று அதிகரிக்க காரணம் என தெரிய வந்துள்ளது.

இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தேர்வுகள் வரவுள்ள நிலையில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News