செய்திகள்
கொள்ளை நடந்த வீடு

பாவூர்சத்திரம் அருகே வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2021-02-23 11:57 GMT   |   Update On 2021-02-23 11:57 GMT
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நெல்லை:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பூமணி(வயது 61). தேங்காய் வியாபாரி. இவருக்கு தேன்மொழி(55) என்ற மனைவியும், சங்கர் கணேஷ், ராமராஜன் என்ற மகன்களும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

இதில் 2-வது மகன் ராமராஜனின் மனைவி பிரசவத்திற்காக தென்காசி அருகே உள்ள ராமச்சந்திரப்பட்டினத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை பூமணி, தனது மனைவி மற்றும் மகன் ராமராஜனை அழைத்துக்கொண்டு மதுரைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுவிட்டார்.

சங்கர் கணேஷ் தனது குடும்பத்தினருடன் பாவூர்சத்திரம் அருகே உள்ள வெங்கடாம்பட்டிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று இரவு பூமணி மதுரையில் இருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த பீரோவின் கதவு உடைக்கப்பட்டு தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. மேலும் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தையும் காணவில்லை.

ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர் யாரோ பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதை அறிந்த அவர்கள் பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவுகளில் படிந்திருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்றுவிட்டு திரும்பி வந்துவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். திருட்டு போன நகை மொத்தம் 500 கிராம் ஆகும். இந்த 60 பவுன் நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது. மெயின்ரோட்டில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
Tags:    

Similar News