செய்திகள்
கோப்பு படம்.

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

Published On 2021-02-23 11:32 GMT   |   Update On 2021-02-23 11:32 GMT
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் தமிழக எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை:

கடந்த மார்ச் மாத மத்தியில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. அதனை தொடர்ந்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேக,வேகமாக அதிகரித்தது.

இதையடுத்து இ-பாஸ் கட்டாயம், போக்குவரத்து ரத்து உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம், தனிமைப் படுத்துதல் பணிகளை அரசு மேற்கொண்டது.

இப்படி அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து விட்டது. கொரோனா தொற்று குறைவு மற்றும் அரசு அளிக்கும் தளர்வுகள் காரணமாக தமிழகம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

தற்போது ஒரு நாளைக்கு 500-க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆஸ்பத்திரிகளில் 5,514 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து நேற்று முதலே தமிழக எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம் உள்பட மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் சுகாதார பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைவரும் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களது உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அவர்களிடம் காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினை உள்ளதா? என கேட்கின்றனர். அப்படி இருந்தால் அவர்களை தமிழகத்திற்குள் அனுமதிப்பதில்லை. திருப்பி கேரளாவுக்குள் அனுப்பி வருகிறார்கள். எந்தவித பாதிப்பும் இல்லை என்றால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

இதேபோல் நீலகிரி மாவட்ட எல்லையான கூடலூர், நெல்லை மாவட்ட எல்லையான செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியாக்கவிளை, தேனி மாவட்ட எல்லைகளிலும் சுகாதார பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கின்றனர்.

இதுதவிர மும்பை, பஞ்சாப் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் விமானம், ரெயில் மூலம் தமிழகத்திற்கு வருகின்றனர். அவர்களை கண்காணிக்க விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் வந்து இறங்கும் பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அவர்களை தொடர்ந்து மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்படும் இடங்களில் பாதிப்பு யாருக்கு வந்தது, எப்படி வந்தது, ஒரே நிகழ்வில் பங்கேற்றவர்கள் இருக்கிறார்களா? என்பதையும் சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் கர்நாடக அரசு அந்த மாநில எல்லைகளை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News