செய்திகள்
கோப்புபடம்

‘பாஸ்டேக்’ முறை அமலுக்கு வந்ததால் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகளிலும் ஒரே நாளில் ரூ.1 கோடி வரை வசூல்

Published On 2021-02-21 10:04 GMT   |   Update On 2021-02-21 10:04 GMT
தமிழகத்தில் ‘பாஸ்டேக்’ முறை அமலுக்கு வந்த நிலையில் 48 சுங்கச்சாவடிகளிலும் ஒருநாள் வசூல், ரூ.1 கோடியை எட்டியிருக்கும் என்று ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை:

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை வாகனங்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் ‘பாஸ்டேக்’ முறை அமல்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் வாகன ஓட்டிகள் அனைவரும் பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டாயம் என்கிற முறை அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ‘பாஸ்டேக்’ பெறாத வாகனங்களுக்கு 2 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து இதுநாள் வரை ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர் வாங்காதவர்களும் அதனை வாங்கி தங்களது வாகனங்களில் ஒட்டியுள்ளனர்.

90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ‘பாஸ்டேக்’ முறைக்கு தங்களது வாகனங்களை மாற்றி விட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலாகி உள்ளது.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவைகளில் இதுநாள் வரையில் இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் மட்டும் ரூ.102 கோடி வசூலாகி உள்ளது. சுங்கச்சாவடி கட்டண வசூலில் இது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.

இதற்கு முன்பு இந்த வசூல் தொகை அதிகபட்சமாக ரூ.85 கோடி வரையிலேயே இருந்துள்ளதாகவும், ‘பாஸ் டேக்’ முறை அமல்படுத்தப் பட்ட பிறகு ரூ.100 கோடியை தாண்டி இருப்பதாகவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘பாஸ்டேக்’ வாங்காதவர்கள் இன்னும் 10 சதவீதம் அளவுக்கே இருப்பதாகவும், இதனால் குறைந்த அளவிலேயே சுங்கச் சாவடிகளில் ரொக்கமாக வசூலாவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 5 ஆயிரம் கி.மீ.க்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளிலும் ‘பாஸ்டேக்’ அமலுக்கு வந்த பிறகு கட்டண வசூல் அதிகரித்துள்ளது. குறிப்பாக ரூ.19 லட்சம் வரையில் வசூலாகி வந்த சுங்கச்சாவடி ஒன்றில் ரூ.20 லட்சம் வரையில் வசூலாகி இருப்பதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் ஒவ்வொரு விதமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பெரிய சுங்கச் சாவடிகளில் இதைவிட கூடுதலாக தினசரி வசூல் இருக்கும். அப்படி பார்த்தால் 48 சுங்கச்சாவடிகளிலும் ஒருநாள் வசூல், ரூ.1 கோடியை எட்டியிருக்கும் என்று ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இதைவிட கூடுதலாகவும், சுங்க கட்டணம் வசூலாகி இருக்கலாம் என்றும் சுங்கச்சாவடி மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.

‘பாஸ்டேக்’ முறை அமலாவதற்கு முன்பு பல்வேறு அரசு துறைகளை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி பணம் கட்டாமல் சென்று வந்தனர். ஆனால் ‘பாஸ்டேக்’ முறை கட்டாயமான பிறகு அதுபோன்று யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுங்கச்சாவடியை கடப்பவர்கள் பணம் கட்டாமல் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே கட்டண வசூல் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள தாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News