செய்திகள்
முத்தரசன்

3வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை- முத்தரசன் பேட்டி

Published On 2021-02-13 09:09 GMT   |   Update On 2021-02-13 09:09 GMT
3-வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக தலைமையிலான அணியில் தான் போட்டியிடுகிறோம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
மதுரை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு இயற்றி வருகிறது. ஜனநாயக வழிமுறையை கைவிட்டு பாசிச போக்கோடு செயல்படுகிறது.

மத்திய அரசின் இசைவு அரசாக தமிழக அரசு செயல்படுகிறது, மத்திய அரசின் அனைத்து தீங்கான திட்டங்களையும் ஆதரிக்கிறது.

தேர்தலுக்காக பயிர்கடன் ரத்து உள்ளிட்ட அறிவிப்புகள் வருகிறது. ஆளும்கட்சியினர் பயன் பெறுவதற்காகவே, இந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்கூட்டியே அறிந்த ஆளுங்கட்சியினர் சில வாரங்களுக்கு முன்பாக கடன் பெற்று உள்ளனர். யார்-யாருக்கு? கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற விவரங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட வேண்டும்.

பாதிப்படைந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியால் பயனில்லை. தேசிய உடமை ஆக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.

முதல்வர் டெல்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து மத்திய அரசு, தமிழகத்துக்கு எவ்வளவு நிலுவைத் தொகை தருவதாக சொன்னார்கள்? என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதனை நியாயப்படுத்தி பேசுவதை பிரதமர் கைவிட்டு, அந்தச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் உயிரிழந்து வருத்தமளிக்கிறது. பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை தீவிரமாக கண்காணித்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி போதுமானது அல்ல, அவர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும்.

வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடனான கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த எங்கள் கட்சியின் சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்ற கூட்டணியை நாங்கள் ஏற்படுத்த விரும்பவில்லை.

3-வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க. தலைமையிலான அணியில் தான் போட்டியிடுகிறோம்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் கொள்கை. நாங்கள் தான் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம்.

தி.மு.க. கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவர்கள் கூடுதல் இடங்கள் கேட்கக் கூடாது.

முதியவர்கள் தபால் வாக்குகள் வேண்டி யாரிடமும் கோரிக்கை வைக்கவில்லை. இந்த தபால் வாக்குகளால் முறைகேடு ஏற்படும்.

அரசியலில் சசிகலா நிற்கதியாய் நிற்கிறார். அவர் முதலில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News