செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்கையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்

Published On 2021-02-11 03:34 GMT   |   Update On 2021-02-11 03:34 GMT
தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
மதுரை:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சமீபத்திய ஆய்வின்படி யானைகளின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. தந்தம் போன்றவற்றுக்காக யானைகளை கொடூரமான முறையில் கொல்லும் அவலம் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் யானை இனமே அழியும் அபாயம் உள்ளது. எனவே யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது குறித்து தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் சி.பி.ஐ. இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதே போல தமிழகத்தில் உள்ள காடுகளில் விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கக்கோரி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நித்திய சவுமியாவும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வனவிலங்கு குற்றத்தடுப்பு சிறப்புப்பிரிவின் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘மனுதாரர்கள் தெரிவிக்கும் சம்பவம் சர்வதேச அளவில் நடைபெறுகிறது. இதில் ஈடுபடுகிறவர்கள் மிகப்பெரும் மாபியாவாகவே செயல்படுகின்றனர்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணை முடிவில் நீதிபதிகள், “யானை இனம் மிகவும் முக்கியமான உயிரினம். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு உள்ள நிலையில், இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வெவ்வேறு மாநிலங்களிலும் உள்ளனர். எனவே தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News