செய்திகள்
மதுரை ஐகோர்ட்

மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த கேட்டு வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

Published On 2021-02-09 09:31 GMT   |   Update On 2021-02-09 09:31 GMT
மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை அமல்படுத்திட உரிய உத்தரவு பிறப்பிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

டெல்லி மெட்ரோ ரெயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி நடந்து வருகிறது. 20 லட்சம் மக்கள் இந்த சேவையை பயண்படுத்தி வருகின்றனர்.

இந்த சேவை இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக மிகவும் பழமையான, கொல்கத்தா மெட்ரோ ரெயில் சேவை ஆகும்.

மதுரை நகரையும் கடந்து திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை புதுக்கோட்டை வரையிலும் குடியிருப்பு பகுதிகள் விரிந்து போய் மொத்தமும் மதுரையாகவே இப்போது மாறிப்போயிருக்கிறது.

பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பிக்கிடக்கிற மதுரையில் ‘மெட்ரோ ரயில் திட்டம்’ வாக்குறுதியாக மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றிட தொடர்ந்து பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த 2-வது பெரிய மாநகர பெருமைக்குரியதாக மதுரை இருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக போக்குவரத்து நெருக்கடியாலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நகர்ப் பெருமையும் மதுரைக்கு உண்டு.

சென்னையை தொடர்ந்து கோவையில் ‘மெட்ரோ ரெயில் திட்டம்’ அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மதுரையில் இந்த திட்டத்தை அறிவிப்பதில் மத்திய, மாநில அரசுகள் தாமதம் காட்டி வருவது தென்தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

மதுரை மெட்ரோ ரெயிலுக்கான பாதை திருமங்கலத்தில் தொடங்கி, எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் தோப்பூர், கரடிக்கல் புதிய பஸ்போர்ட், திருநகர், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ்நிலையம், ரெயில் நிலையம், யானைக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், மாட்டுத் தாவணி பஸ் நிலையம், ஐகோர்ட் கிளை வழியாக மேலூர் வரை அமைக்கலாம்.

இதுதவிர, திருப்புவனத்தில் இருந்து, காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.டி. பார்க் செக்கானூரணி வரை என இரு வழித்தடங்களில் ரெயில் இயக்கலாம். இதற்கான திட்டம் பொறியியல் வல்லுநர்களால் ஆய்வுக்கு உட்படுத்தி ஏற்கப்பட்டுள்ளது.

எனவே மதுரை போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை அமல்படுத்திட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து, மத்திய, மாநில அரசுகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 2-ந்தேதி ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News