செய்திகள்
கோப்புப்படம்

கோவையில் ரெயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உடல் சிதறி பலி

Published On 2021-02-04 08:58 GMT   |   Update On 2021-02-04 08:58 GMT
கோவையில் ரெயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

திண்டுக்கல்லை சேர்ந்தவர் கனகசுப்பு. இவரது மகன் சிவா (வயது 22). இவரது நண்பர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் பவித்ரன் (வயது 22). இவர்கள் 2 பேரும் கோவை மயிலேறிபாளையம் அடுத்த அரசம்பாளையத்தில் உள்ள கல்லூரியில் ஆர்கிடெக்‌ஷர் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

2 பேரும் ஆன்லைனில் தேர்வு எழுத கோவை தண்ணீர் பந்தல் அடுத்த ஜெகநாதபுரத்தில் அறை எடுத்து தங்கினர். நேற்று இரவு 2 நண்பர்களுடன் மேலும் ஒருவர் சேர்ந்து கொண்டார். 3 பேரும் பீளமேடு- வடகோவை ரெயில்வே தண்டவாளம் ஹோப்ஸ் கல்லூரி பகுதியில் நடந்து சென்றனர். அப்போது சென்னையில் இருந்து கோவைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் வந்தது. ரெயில் மிக அருகில் வந்தபோது மற்றொரு நண்பர் அலறி சத்தம்போட்டு தண்டவாளத்தில் இருந்து வெளியே குதித்து தப்பினார்.

மற்ற 2 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் வேகமாக வந்த ரெயில் 2 பேர் மீதும் மோதியது. இதில் சிவாவும், பவித்தரனும் ரெயிலில் சிக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து குறித்து அறிந்ததும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 கல்லூரி மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை விரைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News