செய்திகள்
சீமான்

ஈரோடு, கடலூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை குறைக்கவேண்டும்- சீமான்

Published On 2021-02-03 07:19 GMT   |   Update On 2021-02-03 07:19 GMT
ஈரோடு, கடலூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை குறைக்கவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மற்றும் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தை இதர அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்திற்கு இணையாக குறைக்க வேண்டுமென்ற மருத்துவ மாணவர்களின் கோரிக்கை மிக நியாயமானது தார்மீகமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

இந்த இரு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தை இதர அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டுமென்று ஏற்கனவே, கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தேன். அதனை ஏற்று தற்போது உயர் கல்வித்துறையின் கீழ் இருந்த சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரியைக் கட்டணக்குறைப்பு செய்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் கொண்டுவந்து தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே! எனினும், இந்த அறிவிப்பு மட்டுமே போதுமானதன்று.

ஆகவே, கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தை, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்திற்கு இணையாக நடப்பு கல்வியாண்டு முதலே குறைப்பதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு, மாணவர்களின் பெருஞ்சுமையைக் குறைக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News