செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்- தேவஸ்தான தலைவர்

Published On 2021-01-28 09:57 GMT   |   Update On 2021-01-28 09:57 GMT
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் ஏழைஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தேவஸ்தான தலைவர் கூறினார்.
கன்னியாகுமரி:

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர்ரெட்டி ஆகியோர் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்து தர்ம பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தி பஜனை, பகவத்கீதை சொற்பொழிவு மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி உள்பட பல மாநிலங்களில் உள்ள 35 கோவில்களுக்கு பசு தானம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் உள்பட 7 கோவில்களுக்கு அடுத்த மாதம் பசு தானம் வழங்கப்பட உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் ஏழைஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேவஸ்தானத்தில் நடக்கும் ஏழைகளுக்கான இலவச திருமணங்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் மூலமாக இலவச தங்கத்தாலி வழங்கப்படும். திருமணம் நடத்த விரும்புவோர் 15 தினங்களுக்கு முன்னர் தேவஸ்தானத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு விவேகானந்தா கேந்திர நிறுவனம், மேலும் 2 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்த இடத்தில் திருமண மண்டபம் மற்றும் கோசாலை மடம் போன்றவை கட்ட திட்டமிட்டுள்ளோம்.

கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கொடிமரம் கடல் உப்பு காற்றால் அரிக்கப்பட்டுள்ளது. இந்த கொடிமரத்துக்கு விரைவில் தங்க முலாம் பூச ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்களின் கோரிக்கையின்படி மிக உயரமான பிரம்மாண்ட கருடாழ்வார் சிலை நிறுவப்படும். மேலும் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் கோவில் இருப்பதை பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக மிக பிரமாண்டமான அலங்கார தோரணவாயல் அமைக்கப்படும்.

கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் அடுத்த ஆண்டு முதல் பிரம்மோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதிக்கு ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின்போது கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்த ராவ், திருமலை திருப்பதி தேவஸ்தான துணைத தலைவர்கள் ஆனந்தகுமார் ரெட்டி, அனில்குமார் ரெட்டி, தேவஸ்தான உறுப்பினர்கள் மோகன்ராவ், கார்த்திகேயன், டாக்டர் மிஸ்சிதா, ரெங்கா ரெட்டி, கிருஷ்ணமூர்த்தி, அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News