செய்திகள்
மீனவர்கள் குடும்பத்தினர்

ராமேசுவரம் மீனவர்களின் குடும்பத்தினர் கதறல்- ‘இனி எப்படி வாழ்வோம்’ என உருக்கம்

Published On 2021-01-23 09:44 GMT   |   Update On 2021-01-23 09:44 GMT
இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்களின் குடும்பத்தினர், கடல் தொழிலை தவிர்த்து வேறு தொழில்கள் தெரியாது. இனி எப்படி வாழ்வோம் என்று தெரியவில்லை என தெரிவித்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தங்கச்சி மடம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கோட்டைப்பட்டினம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, கைது செய்வதும் பின்னர் விடுவிப்பதும், படகுகளை கையகப்படுத்துவதும் என்று இரு நாடுகளின் கடல் எல்லையில் தற்போது வரை பிரச்சினை நிலவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறை முகத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி ஆரோக்கியசேசு என்பவருடைய படகில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கை கடற்படையின் தாக்குதலினால் 4 மீனவர்களும் உயிரிழந்தனர்.

இலங்கை கடற்படையின் இந்த செயலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்ததுடன் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்குத் தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்தார்.

அதேபோல், இலங்கை அரசின் இச்செயலுக்கு மத்திய அரசும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 4 மீனவர்களின் இறப்பால் அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள் ளனர். அவர்களது சொந்த ஊரில் சோகம் நிலவுகிறது.

இலங்கை கடற்படை தாக்குதலில் பலியான மண்டபத்தை அகதிகள் முகாமை சேர்ந்த சாம்சன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது. சாம்சனை இழந்து அவரது மனைவி விஜயலட்சுமி கைக்குழந்தையுடன் தவித்து வருகிறார். கணவரை இழந்த அவர் கதறி அழுவது பரிதாபமாக இருந்தது. அவரை உறவினர்கள் சமாதனப்படுத்தினர். கணவரை பார்க்கணும் போல ஆசையாக உள்ளது, அவரது உடலை தொட்டுப்பார்க்கணும், கட்டி பிடிக்கணும். பிறந்த குழந்தையுடன் 3 நாட்கள் தான் இருந்தார். அவருக்கு எதுவுமே தெரியாது. அநியாயமாக அவரை கொன்று விட்டார்கள். கணவரின் இறுதி காரியத்தை எனது குழந்தையுடன் நான் செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.

தாக்குதலில் பலியான திருப்புல்லாணி தாதனேந்தலை சேர்ந்த மீனவர் செந்தில்குமாரின் மனைவி அபினேஸ்வரி கூறும்போது, ‘என் கணவர் அன்றாடம் தொழிலுக்குச் சென்று வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தேன். தற்பொழுது என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.

எனது மகனை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக பார்க்க வேண்டும் என்று எனது கணவர் விரும்பினார். அவர் தற்போது என்னுடன் இல்லை. அரசாங்கம் அளித்த பணம் பெரிய அளவில் உதவாதே. என்னுடைய மகனின் கல்வி செலவை அரசே ஏற்று நல்வழிக்கு வித்திட வேண்டும்’ என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பேசுகையில், ‘கடல் தொழிலை நம்பி தான், தாங்கள் வாழ்ந்து வருகிறோம். கடல் தொழிலை தவிர்த்து வேறு தொழில்கள் தெரியாது. இனி எப்படி வாழ்வோம் என்று தெரியவில்லை.

அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையை வைத்து, தற்போதைய சூழலில் மட்டுமே வாழ முடியும் என்பதால், இனி வரும் காலங்களில் தங்கள் குழந்தைகளின் கல்விக்கனவை நிறைவேற்ற பெரிய அளவில் உதவாது.

இதனால் குழந்தைகளுக்கு முழு கல்விச்செலவை அரசு ஏற்க வேண்டும்.மேலும், இனி வரும் காலங்களில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்’ என்றனர்.

இறந்த மீனவர் செந்தில்குமாரின் உறவினர் கருப்பையா என்பவர் கூறுகையில், ‘படகு சேதம் அடைந்தது எனத் தெரிந்தவுடன் குடும்பத்துடன் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்றிருந்தோம். அங்கு இந்திய கப்பற்படையினர் 4 பேரும் பத்திரமாக இலங்கையிடம் இருப்பதாக கூறினார்.

அதனால், நாங்கள் கரையிலேயே காத்திருந்தோம். ஆனால், மாலை 6.30 மணி அளவில் 4 மீனவர்களும் இறந்து விட்டதாகவும், 2 மீனவர்களுடைய உடல் யாழ்ப்பாணம் கடற்பகுதியில் ஒதுங்கி இருப்பதாகவும் கூறினார்கள். இவ்வாறு மாற்றி மாற்றி கூறுவது எங்களுக்கு மேலும் அடுத்த முறை கடலுக்குச் செல்வதற்கு அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.

மேலும் இலங்கை கடற்படை கம்பி, கட்டைகள் மூலம் கொடூரமாக 4 மீனவர்களை சித்ரவதை செய்து கொலை செய்திருக்கிறார்கள். இந்திய அரசே மீண்டும் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கேட்டுக் கொண்டார்.

மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுத்து சர்வதேச கடல் எல்லையில் உள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை காணும்பட்சத்தில் இதுபோன்ற மதிப்புமிக்க மீனவர்களின் உயிர்கள் காக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags:    

Similar News