செய்திகள்
ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பனியனை மாற்றி காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றது அம்பலம்

Published On 2021-01-23 08:38 GMT   |   Update On 2021-01-23 08:38 GMT
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டம் செய்துள்ளது கோட்டாசியர் விசாரணை தெரியவந்துள்ளது.
மதுரை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தமுறை ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிடுவதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்தனர்.

இந்தநிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரர் கண்ணன் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் இரண்டாம் பரிசு வென்ற கருப்பண்ணன் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகார் மனுவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் சுற்று முதல் 3ம் சுற்று வரை 33ம் எண்ணில், ஹரிகிருஷ்ணன் பங்கேற்று 7 காளைகளை பிடித்தார். மூன்றாம் சுற்றில் அவருக்கு காயம் ஏற்பட்டதால், அவர் வெளியேறினார். அப்போது, தனது பனியனை பதிவு செய்யாத மற்றொரு நபரிடம் (கண்ணன்) கொடுத்துள்ளார். அதில் அவர் 5 காளைகளை பிடித்தார். இதனால் 12 காளைகளை கண்ணன் பிடித்ததாக கருதி அவருக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் ஆள் மாறாட்டம் நடந்துள்ளது. முதல் பரிசு அவருக்கு வழங்கக்கூடாது. அதிக காளைகளை நான்தான் பிடித்துள்ளேன். எனவே, எனக்கு முதல் பரிசை வழங்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, கோட்டாசியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தாலுகா அலுவலகத்தில் அலங்காநல்லூரில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியை தாசில்தார்கள் சிவக்குமார், பழனிக்குமார் மற்றும் வருவாய் ஊழியர்கள் சேர்ந்து போட்டு பார்த்தனர். அப்போது, 33ம் எண்ணுடைய நபர் காளை பிடிப்பதும், அவர் காயமடைந்து வெளியேறுவதும், பின்பு அதே பனியனை அணிந்து  வேறுநபர் களத்தில் விளையாடுவதை கண்டுபிடித்தனர். இதன்மூலம் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.

பெயர் பதிவு செய்யப்படாமல் அவர் களத்தில் இறங்கியிருந்தாலும் அவர் தொடர்ச்சியாக காளைகளை அடக்கியுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையை தாசில்தார்கள் தயாரித்துள்ளனர். அந்த அறிக்கையை இன்று ஆர்.டி.ஓ., கலெக்டரிடம் வழங்க உள்ளனர்.
Tags:    

Similar News