செய்திகள்
வழக்கு பதிவு

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு

Published On 2021-01-22 09:40 GMT   |   Update On 2021-01-22 09:40 GMT
தேனியில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி:

தேனி அருகே உள்ள அரண்மனைபுதூரில் நேற்று முன்தினம் தி.மு.க. சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். இதில் பூதிபுரத்தைச் சேர்நத லெட்சுமி என்பவர் பேசும் போது, எங்கள் ஊரில் சாலைகள் மோசமாக உள்ளது. போடி சட்டமன்ற உறுப்பினரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வரும்போது மட்டும் சாலை போடப்பட்டது.

தற்போது அவை முற்றிலும் சேதமாகி விட்டது. எங்கள் ஊருக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தால் குரல்வளையை நெரித்து கொலை செய்வேன் என்று பேசினார். இது கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதை கேட்ட மு.க.ஸ்டாலின் அந்த பெண்ணை கண்டித்து தான் கூறிய வார்த்தைகளை வாபஸ் பெறுமாறு கூறினார். இதனையடுத்து அவரும் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

லட்சுமி பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பூதிப்புரம் அ.தி.மு.க. செயலாளர் ரவி, அன்னஞ்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் வேல்முருகன் ஆகியோர் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து லட்சுமி மீது பழனிசெட்டிபட்டி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 506 பகுதி 2 (கொலை மிரட்டல்), 153 சட்டப்பிரிவு கலகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் வேண்டும் என்றே ஆத்திரமூட்டுதல், 504 சட்டப்பிரிவு (கலகம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து லட்சுமியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News