செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ராகுல் காந்தி

கோவையில் எடப்பாடி பழனிசாமி-ராகுல்காந்தி நாளை பிரசாரம்

Published On 2021-01-22 08:15 GMT   |   Update On 2021-01-22 08:15 GMT
ஒரே நாளில் 2 தலைவர்கள் கோவையில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொள்வதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கோவை:

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ஒரு புறம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என தொடர மறுபுறம் தலைவர்கள் பிரசாரத்தில் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2 நாட்களாக அவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முகாமிட்டு பிரசாரம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று இரவு கோவை வருகிறார்.

கோவை வரும் முதல்-அமைச்சருக்கு விமான நிலையத்தில் ஏராளமான அ.தி.மு.கவினர் திரண்டு வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பை பெற்று கொண்டு காரில் சுற்றுலா மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார்.

நாளை(சனிக்கிழமை) காலை 7.10 மணிக்கு கோனியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை ராஜவீதியில் தொடங்குகிறார்.

அதனை தொடர்ந்து சுந்தராபுரம், பொள்ளாச்சி, சூலூர், சுல்தான்பேட்டை, மேட்டுப்பாளையம், துடியலூர், அன்னூர், சிங்காநல்லூர் உள்பட 2 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

இதேபோல தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்தும் வகையிலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் ராகுல்காந்தி எம்.பி. களமிறங்கி உள்ளார். பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரம் வந்த அவர் அங்கு நடந்த ஜல்லிக்கட்டை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

அதன் அடுத்தகட்டமாக கொங்கு மண்டல வாக்குகளை குறிவைத்து நாளை கோவை வரும் ராகுல்காந்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக நாளை காலை 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ராகுல்காந்தி காலை 11 மணியளவில் கோவைக்கு வருகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரண்டு சித்ரா-காளப்பட்டி சாலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து சித்ரா பகுதியில் திறந்த வேனில் இருந்தவாறு ராகுல்காந்தி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

சித்ராவில் பிரசாரத்தை முடித்து கொண்டு காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்திற்கு செல்லும் ராகுல் காந்தி அங்கு சிறு, குறு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் மாலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி செல்லும் ராகுல் காந்திக்கும் அங்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மாலை 4.40 மணிக்கு திருப்பூர் குமரன் நினைவு இல்லத்துக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். மாலை 5.45 மணிக்கு திருப்பூரில் உள்ள ராமசாமி முத்தம்மாள் மண்டபத்தில் தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார்.

மறுநாளான 24-ந் தேதி ஈரோட்டில் பிரசாரத்தை முடித்து கொண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாலை 4.45 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்றுகிறார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர், செயல்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

2 பெரும் தலைவர்கள் கோவையில் ஒரே நாளில் முகாமிட்டு மக்களை சந்தித்து தங்களது கட்சிகளுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர். இவர்கள் 2 பேரின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விருதுநகர், ராமநாதபுரத்தில் இருந்து போலீஸ்காரர்களும், திருச்சி, கரூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வந்துள்ளனர்.

கோவை மாநகரில் 2,500 போலீசாரும், புறநகரில் 3000 போலீசார் என மொத்தம் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 2 தலைவர்கள் கோவையில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொள்வதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


Tags:    

Similar News