செய்திகள்
பணம் கொள்ளை

கோடம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்-செல்போன் பறிப்பு

Published On 2021-01-22 03:06 GMT   |   Update On 2021-01-22 03:06 GMT
சென்னை கோடம்பாக்கத்தில் கத்திமுனையில் கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்ற கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை:

செங்கல்பட்டில் உள்ள தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் தேனியைச் சேர்ந்த அழகேஸ்வரன், கோவில்பட்டியைச் சேர்ந்த அனீஸ், திருநெல்வேலியைச் சேர்ந்த அத்தீப் ஆகிய 3 பேரும் படித்து வருகிறார்கள். இவர்கள் சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு கீழ் உள்ள மேன்சன் ஒன்றில் தங்கி உள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு மேம்பாலத்துக்கு கீழ் உள்ள டீ கடைக்கு இவர்கள் சென்றனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர்கள் 3 பேரையும் கத்திமுனையில் மிரட்டினார்கள்.

அவர்களிடம் உள்ள வங்கி ஏ.டி.எம். கார்டுகளை பறித்தனர். பின்னர் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு அழைத்து சென்று அவர்களது கார்டுகளை பயன்படுத்தி ரூ.22 ஆயிரத்தை எடுத்தனர். அவர்களது செல்போன்களையும் பறித்தனர்.

பின்னர் அருகில் ரெயில்வே தண்டவாளம் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்கள் மூவரையும், விடியும்வரை கத்திமுனையில் சிறை பிடித்ததுபோல உட்கார வைத்தனர். நேற்று அதிகாலை வேளையில் அவர்கள் மூவரையும் மிரட்டி விட்டு கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

ஏ.டி.எம். மையத்தில் எடுத்த ரூ.22 ஆயிரம், 3 செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளையும் கொள்ளை அடித்துச் சென்று விட்டனர்.

இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. எனவே கொள்ளையர்களை பிடிக்க உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News