செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தற்கொலையை தடுக்கவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது- ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

Published On 2021-01-21 02:41 GMT   |   Update On 2021-01-21 02:41 GMT
ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்கும் நோக்கத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை:

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 21-ந்தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்தும், இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும் ஆன்-லைன் சூதாட்ட நிறுவனங்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை துணை செயலாளர் உதயபாஸ்கர் பதில் மனு தாக்கல் செயதார். அதில் கூறியிருப்பதாவது:-

தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதை போல, தமிழகத்திலும் தடை விதிக்கும் சட்டம் இயற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை ஆலோசனை வழங்கியது. அதை ஏற்று, இந்த சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது.

கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் சிறார்கள். அதுமட்டுமல்ல குழந்தைகள், தங்கள் பெற்றோரின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன் லைன் சூதாட்டத்தில் பங்கேற்கின்றனர். அதனால் பெற்றோருக்கு ஏற்படும் பண இழப்பை தடுக்கவும், தற்கொலைகளை தடுக்கவுமே இந்த அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ரம்மி விளையாட்டு திறமைக்கானது என்றாலும் பந்தயம் வைத்து விளையாடினால் அது குற்றமாகும். அதனால், பணம் வைத்து விளையாடுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தை ஒருபோதும் வர்த்தகமாக கருத முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், விசாரணையை வருகிற பிப்ரவரி 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News