செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

98 சதவீத பெற்றோர் ஆதரவால் பள்ளிகள் திறக்கப்பட்டது- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2021-01-20 09:06 GMT   |   Update On 2021-01-20 09:06 GMT
தமிழகத்தில் 98 சதவீதம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒப்புதலுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அவினாசி:

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்புகள் தொடங்கின.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்கள் முக கவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை அவர் பார்வையிட்டார்.

தமிழகத்தில் 98 சதவீதம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒப்புதலுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் 400 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலின்படி பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசு மூலம் மாணவர்களுக்கு முக கவசம் அணிதல், கிருமி நாசினி உபயோகித்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே மாணவர்கள் நன்றாக படித்து, சிறந்த கல்வி பெற்று முன்னேற வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி, ஹிள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News