செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டி

திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்

Published On 2021-01-20 06:42 GMT   |   Update On 2021-01-20 06:42 GMT
திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 550 காளைகள் பங்கேற்றன.
திருச்சி:

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது சூரியூர் ஊராட்சி. இங்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தை மாதம் 2-ம் நாள் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிககட்டு நடத்தப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கடந்த 1-ந்தேதி பந்தக்கால் நட்டு கிராம கமிட்டியினர் முறைப்படி செய்தனர்.

தொடர் மழையால் வழக்கமாக நடத்தப்படும் பெரிய குளத்தின் திடலில் மழைநீர் தேங்கியதால் இந்த ஆண்டு அடப்பன்குளம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் மழையால் ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார். இதில் 550 காளைகள் பங்கேற்றன. 450 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர்.

போட்டி தொடங்கியதும் முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பிறகு மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். சில வீரர்கள் துணிச்சலுடன் களமிறங்கி காளையின் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து சென்றது.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளையின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று மாலை 3 மணி வரை போட்டிகள் நடக்கிறது. போடியை காண திருச்சி மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வந்து கண்டு களித்தனர்.

போட்டியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து சான்று அளித்தனர். அதன் பிறகே காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.

அதேபோல் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்று வந்த வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் போட்டியில் பங்கேற்கும் முன்பு வீரர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவ்வப்போது சானிடைசர் திரவம் கைகளில் தெளிக்கப்பட்டது.

போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயார் நிலை வைக்கப்பட்டிருந்தது. ஆம்புலன்ஸ் வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
Tags:    

Similar News