செய்திகள்
வைகை அணை

61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

Published On 2021-01-10 06:51 GMT   |   Update On 2021-01-10 06:51 GMT
தொடர் மழை நீடிப்பதால் வைகை அணையின் நீர் மட்டம் 61 அடியை எட்டியுள்ளது. மேலும் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கூடலூர்:

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிறைந்துள்ளது. மேலும் அருவிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதே போல் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் கண்மாய் மற்றும் குளங்களில் குளித்துச் செல்கின்றனர். சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.54 அடியில் நீடிப்பதால் அணைக்கு வரும் 102 கன அடியில் 27 கன அடி நீர் பாசனத்துக்காகவும் 75 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுவதால் வராக நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதே போல் கொட்டக்குடி ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

வைகை அணையின் நீர் மட்டம் 60.99 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1183 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 469 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 121.35 அடியாக உள்ளது. 1284 கனஅடி நீர் வருகிறது. 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 51.20 அடியாக உள்ளது. 158 கனஅடி நீர் வருகிறது. 50 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 0.3, தேக்கடி 5.2, கூடலூர் 5.8, சண்முகாநதி அணை 6.3, வீரபாண்டி 7.2, சோத்துப்பாறை 5, கொடைக்கானல் 0.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News