செய்திகள்
வைகோ

முதுநிலை சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த கூடாது- வைகோ

Published On 2021-01-10 06:27 GMT   |   Update On 2021-01-10 06:27 GMT
முதுநிலை சட்டப்படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு ‘நீட்’ புகுத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்கள், பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மாணவர்களின் மருத்துவக் கனவை கானல் நீராக்கிய மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது சட்டக்கல்வியிலும் சமூக நீதியை ஒழிக்க முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.

“முதுகலை சட்டப்படிப்புக்கு இனிமேல் அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்தப்படும். முதுநிலை சட்டப்படிப்பு எல்.எல்.எம். என்பது இரண்டு ஆண்டு படிப்பாக்கி, ஓராண்டு படிப்பு ரத்து செய்யப்படும்” என்ற அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் அறிவித்து இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் சட்டம் பயின்று, முதுநிலை சட்ட மேற்படிப்பு பயில்வதை முற்றிலுமாக தடை செய்திடும் வகையில் உள்நோக்கத்தோடு இந்திய பார் கவுன்சில் அறிவிப்புகளைச் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமூக நீதிக் கோட்பாட்டின் ஆணி வேரையே அறுத்தெறிய துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய செயல் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

கல்வித்துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் மத்திய பா.ஜ.க.அரசு, முதுநிலை சட்டப்படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே இந்திய பார் கவுன்சில் தனது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News