செய்திகள்
நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டபோது எடுத்த படம்.

பறவை காய்ச்சல் எதிரொலி- நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

Published On 2021-01-07 04:30 GMT   |   Update On 2021-01-07 04:30 GMT
கேரளாவில் வாத்துகளை பறவை காய்ச்சல் நோய் தாக்கி இருப்பதை தொடர்ந்து, நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.
நாமக்கல்:

கேரள மாநிலம் ஆலப்புலா மாவட்டத்தில் வாத்து பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் கிருமிகள் தாக்கி, வாத்துகள் இறந்து இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கேரள மாநில அரசு பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக சுகாதாரத் துறையினரும் தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களிலும் சோதனை சாவடிகளில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.

தமிழகத்தின் முக்கிய முட்டை உற்பத்தி மண்டலமாக நாமக்கல் திகழ்கிறது. இந்த மண்டலத்தில் ஏறத்தாழ 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ள நிலையில், நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்ணைகளின் முகப்பு வாயிலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரை நிரப்பி, அதில் கால்களை கழுவிய பின்னரே தொழிலாளர்களை பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். இதேபோல் கோழிகளுக்கும் ஸ்பிரே மூலம் கிருமிநாசினி தெளிக்கின்றனர். சில பண்ணைகளில் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

கோழிப்பண்ணைகளுக்கு முட்டை, கோழி மற்றும் கோழி எரு ஏற்ற வரும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி கலந்த தண்ணீர் தெளித்த பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கபடுகின்றன. இதுபோன்ற பல்வேறு உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான பண்ணைகளில் வெளி ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. முட்டை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அட்டைகளை கிருமிநாசினி கலந்த தண்ணீரில் நன்கு சுத்தம் செய்த பின்னரே பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதிக இறப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இதுதவிர மாதந்தோறும் ரத்த மாதிரிகள் சேகரித்து, போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வருகிறோம். இதுவரை நமது மாவட்டத்தில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் இல்லை. இங்குள்ள பண்ணைகள் சர்வதேச தரத்தில் பராமரிக்கப்பட்டு வருவதால், நோய் கிருமிகள் பரவ வாய்ப்பு இல்லை. எனவே பண்ணையாளர்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தின் முக்கிய முட்டை வியாபார ஸ்தலமாக கேரளா விளங்குவதால், கோழி மற்றும் முட்டை விற்பனை பாதிக்க கூடும் என்ற அச்சத்தில் பண்ணையாளர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News