செய்திகள்
கோழிகள்

பறவை காய்ச்சல் எதிரொலி- புளியரை சோதனை சாவடியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு

Published On 2021-01-06 10:59 GMT   |   Update On 2021-01-06 10:59 GMT
புளியரை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர் தலைமையில் 5 பணியாளர்கள் உள்ளடக்கிய 3 குழுக்கள் இரவு பகலாக 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர்.
செங்கோட்டை:

கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள பண்ணைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் இறந்தன.

ஆய்வில் அவைகள் பறவைக்காய்ச்சல் தாக்கி பலியானது தெரியவந்தது. மேலும் ஒருவித பாக்டீரியாக்கள் மூலம் எச் 5, என் 8 வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இத்தகைய வைரஸ் மூலம் மனிதர்களுக்கும் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து அந்த மாவட்டங்களில் உள்ள பறவை பண்ணைகளில் பராமரிக்கப்பட்டு வந்த பறவைகள் அனைத்து அழிக்கப்பட்டன.

கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி ஆகிய கேரள எல்லையோர மாவட்டங்களில் வழியாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கவும், கோழி, வாத்துக்களின் முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கால்நடை பராமரிப்பு, பொது சுகாதாரம், பேரிடர் மேலாண்மைதுறைகளை சேர்ந்த அதிகாரிகள், அனைத்துதுறை அலுவலர்கள் ஒருங்கிணைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணிகளை கலெக்டர் சமீரன் தலைமையில் கால்நடை பராமரிப்புதுறை இணை இயக்குர் ஹாலித், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் சிவலிங்கம், பேரிடர் மேலாண்மை தாசில்தார் சண்முகம் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.

புளியரை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் 90 நாட்கள் நடக்கிறது. கால்நடை மருத்துவர் தலைமையில் 5 பணியாளர்கள் உள்ளடக்கிய 3 குழுக்கள் இரவு பகலாக 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் கேரளாவில் இருந்து வாத்து, கோழி, பறவை கழிவுகள், முட்டைகள் கொண்டு வரும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் மீண்டும் கேரளாவிற்கே திரும்பி அனுப்பபட்டு வருகிறது.

மற்ற வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கபட்டு தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றன.

Tags:    

Similar News