செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் தொடக்க கல்வி மாணவர் சேர்க்கை 99.88 சதவீதமாக உள்ளது- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2021-01-06 03:12 GMT   |   Update On 2021-01-06 03:12 GMT
இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கிறோம். தமிழகத்தில் தொடக்க கல்வி மாணவர் சேர்க்கை 99.88 சதவீதமாக உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை:

மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு 404 மாணவர்களுக்கு ரூ.16 லட்சத்து 33 ஆயிரம் செலவில் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை, எளிய மாணவர்கள் வாழ்வில் வளம்பெறவும், கல்வியை ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தான் விலையில்லா சைக்கிள் உள்பட 16 வகையான உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளுடன் ஒப்பிடும்போது பள்ளிக்கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் நான்கில் ஒரு பங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் தொடக்க கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 99.88 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கிறோம். மேலும் உயர்கல்வி சேர்க்கை 49.6 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் கல்விக்கான தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டு நாள்தோறும் ஒளிபரப்பப்படுகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மதுரை அருகே பரவை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், முன்னாள் பேரூராட்சி தலைவர் பரவை ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் சாமிநாதன் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் திரவியம், செயல் அலுவலர் சுந்தரி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சவுந்தர பாண்டி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலூர் கல்வி மாவட்ட அலுவலர் பங்கஜம் நன்றி கூறினார்.
Tags:    

Similar News