செய்திகள்
கோப்புபடம்

இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்தது: மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்த அனுமதி

Published On 2021-01-03 09:44 GMT   |   Update On 2021-01-03 09:44 GMT
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் எப்போதும் போல வாகனங்களை நிறுத்துவதற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்த போதிலும் வாகனங்களை சர்வீஸ் சாலையில் நிறுத்துவதற்கு போலீசார் அனுமதிக்காமல் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் எப்போதும் போல வாகனங்களை நிறுத்துவதற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் மெரினாவுக்கு கார்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்த அனைவரும் சர்வீஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக மூடப்பட்டிருந்த சர்வீஸ் சாலைகள் திறக்கப்பட்டு இருந்தன.

மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு சில வாரங்கள் ஆகிறது. இதுவரை பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மெரினா காமராஜர் சாலை யிலேயே நிறுத்தி வந்தனர். அங்கு வண்டிகளை நிறுத்தி விட்டு கடற்கரைக்கு செல்வது சிரமமாக இருந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டே மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மெரினா கடற்கரை திறக்கப்பட்ட போதிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டு பிறந்து ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தனர். காலையிலேயே கார், மோட்டார் சைக்கிள்களில் படையெடுத்தனர்.

சிறுவர்களும், இளைஞர்களும் மெரினாவில் விளையாடி மகிழ்ந்தனர். கிரிக்கெட், கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

குடும்பத்தோடு மெரினாவுக்கு வந்திருந்த மக்கள் ஒன்றாக அமர்ந்து பொழுதை கழித்தனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதை கருத்தில்கொண்டு போலீஸ் பாதுகாப்பும் மெரினாவில் அதிகரிக்கப்பட்டு இருக்கும். இன்றும் அதுபோன்ற பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அண்ணாசதுக்கம், மெரினா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மெரினாவில் பகலிலேயே காதல் ஜோடிகள் அதிக அளவில் கூடுவதுண்டு. இன்றும் ஏராளமான காதல் ஜோடிகள் கடற்கரைக்கு வந்து தனிமையில் அமர்ந்து இருந்தனர்.

அப்போது எல்லை மீறிய காதல் ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News