செய்திகள்
மோசடி

சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.97 லட்சம் மோசடி- சிபிஐ வழக்குப்பதிவு

Published On 2020-12-18 01:17 GMT   |   Update On 2020-12-18 01:17 GMT
சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.97 லட்சம் மோசடி செய்த புகாரில் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் தேவராஜ் (வயது 63). இவர் சென்னை வியாசர்பாடியில் வசிக்கிறார். இவர் சி.பி.ஐ. போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

சென்னை துறைமுகத்தில் ஊழியராக வேலை செய்யும் பூபதி என்பவர் எனக்கு அறிமுகமானார். எனது மகனுக்கு துறைமுகத்தில் டிராபிக் மேலாளர் என்ற வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி கேட்டார். நான் பல தவணைகளில் ரூ.97 லட்சம் வரை கொடுத்தேன். ஆனால் துறைமுகத்தில் வேலை வாங்கி கொடுக்காமல் பூபதி ஏமாற்றி விட்டார். நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, என்னை மிரட்டினார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். ரூ.97 லட்சத்தை சுருட்டிய ஊழியர் பூபதி கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. அவர் மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News