செய்திகள்
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் குடில் தயாரிக்கும் பணி நடந்த போது எடுத்த படம்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தூத்துக்குடியில் தயாராகும் விதவிதமான குடில்கள்

Published On 2020-12-16 09:46 GMT   |   Update On 2020-12-16 10:15 GMT
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விதவிதமான குடில்கள் தயாராகி வருகின்றன.
தூத்துக்குடி:

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி ஏசு கிறிஸ்து பிறந்த தினம், கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வழங்கியும் கொண்டாடுவார்கள். அதே போன்று கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் மக்கள் வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிடுவது வழக்கம். அதே போன்று கிறிஸ்துமஸ் குடில்களும் அமைத்து வருகின்றனர்.

இதனால் தூத்துக்குடியில் விதவிதமான கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாற்றுக்களால் ஆன குடில், ஓட்டுக் குடில், ஓலைக் குடில் என்று முக்கால் அடி முதல் 6 அடி வரை உயரம் கொண்டதாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து கிறிஸ்துமஸ் குடில் தயாரித்து விற்பனை செய்து வரும் தூத்துக்குடி கிரேட்காட்டன் ரோட்டை சேர்ந்த கனகராஜ் கூறும் போது, தூத்துக்குடியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் குடில்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான குடில்களை செய்து வருகிறேன். இந்த ஆண்டு பனை ஓலை, நாற்று வைத்து குடில் தயாரித்து உள்ளேன். முக்கால் அடி முதல் 6 அடி வரையிலும் உயரம் கொண்ட குடில்களை தயாரித்து வருகிறேன். பல்வேறு ஆலயங்களில் இருந்தும் குடில் செய்வதற்கு பதிவு செய்து வருகின்றனர். இந்த குடில் மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக பிரித்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். வேம்பு, அத்தி, ஆலமர பலகைகள் மூலம் குடில் தயாரிக்கிறோம். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் கிறிஸ்துமஸ் குடிலை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் அதிக அளவில் விற்பனையாகும் என்று கூறினார்.
Tags:    

Similar News