செய்திகள்
ரெயில்

நெல்லையில் இருந்து ஷீரடிக்கு ஜனவரி 5-ந்தேதி சிறப்பு ரெயில்

Published On 2020-12-13 06:34 GMT   |   Update On 2020-12-13 06:34 GMT
மதுரை, திருச்சி, சென்னை வழியாக நெல்லையில் இருந்து ஷீரடிக்கு ஜனவரி 5-ந்தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை:

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முன்னேற்பாடுகளுடன் கடந்த மாதம் தீபாவளி கங்கா ஸ்நானம் ரெயில் சுற்றுலா நடத்தப்பட்டது. அதில் 480 பயணிகள் தீபாவளியை காசியில் கொண்டாடினர்.

இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பாபா தரிசன யாத்திரை சுற்றுலா ரெயிலை நெல்லையில் இருந்து ஷீரடிக்கு இயக்க உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய ரெயில்வே சுற்றுலா கழகம் சார்பில் நெல்லையில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அந்த சிறப்பு ரெயில் சேவை அடுத்த மாதம் ஜனவரி 5-ந் தேதி புறப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயில் நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், சென்னை எழும்பூர், மந்திராலயம், பண்டரிபுரம் வழியாக ஷீரடிக்கு செல்கிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் இதே மார்க்கமாக நெல்லைக்கு திரும்பி வருகிறது. இவ்வாறு செல்லும் பக்தர்கள் அனைவரும் 2-ம் வகுப்பு பெட்டிகளில் அழைத்து செல்லப்படுவார்கள்.

இந்த சிறப்பு ரெயில் 900 பேர் செல்ல வசதி கொண்டதாக இருந்தாலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 400 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த சிறப்பு ரெயிலில் பயணிகள் நெல்லையில் இருந்து ஷீரடிக்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் நெல்லை திரும்புவதற்கான கட்டணமாக ஒருவருக்கு ரூ. 5 ஆயிரத்து 685 வசூலிக்கப்படும்.

இந்த கட்டணத்தில் பயண நேரத்தில் சைவ உணவுகள் மற்றும் ஷீரடியில் தங்கும் கட்டணமும் அடங்கும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. ஆனால் நெல்லை ரெயில் நிலையத்தை தவிர்த்து மற்ற மார்க்கங்களில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு அவர்கள் செல்லும் பயண தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து ஷீரடிக்கு சென்று மீண்டும் நெல்லைக்கு திரும்பி வருவதற்கான 5 இரவுகள், 6 பகல்கள் கொண்ட பயணத் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு ரெயிலில் செல்ல முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 90031 40680 மற்றும் 82879 31964 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News