செய்திகள்
பாபநாசம் அணை

பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2½ அடி உயர்வு

Published On 2020-12-10 07:41 GMT   |   Update On 2020-12-10 07:41 GMT
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2,781 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 134.10 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரேநாளில் 2 ½ அடி உயர்ந்து இன்று காலை 136.70 அடியாக உள்ளது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்று அதிகபட்சமாக சேர்வலாறு மலைப் பகுதியில் 56 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 32 மில்லி மீட்டரும், ராமநதி அணை பகுதியில் 25 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் குறைந்த அளவே சாரல் மழை பெய்துள்ளது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2,781 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை. இதனால் நேற்று 134.10 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரேநாளில் 2 ½ அடி உயர்ந்து இன்று காலை 136.70 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 146.09 அடியாக இருந்தது. அது ஒரேநாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 149.11 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1,762 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 445 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 102.35 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 103.70 அடியாக உள்ளது.

இதுபோல ராமநதி, கொடுமுடியாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணை நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. கடனாநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

வட மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏராளமான விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்மாவட்டங்களில் பெரு வெள்ளம் ஏற்படாததால் அனைத்து விவசாய பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குற்றால அருவிகள், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை அருவி ஆகிய அனைத்திலும் தற்போது தண்ணீர் நன்றாக விழுகிறது. ஆனால் கொரோனா முன்எச்சரிக்கை காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News