செய்திகள்
உடுமலை அமராவதி அணை

3-வது முறையாக நிரம்பிய உடுமலை அமராவதி அணை

Published On 2020-12-07 10:12 GMT   |   Update On 2020-12-07 10:12 GMT
இந்த ஆண்டில் அமராவதி அணை 2 முறை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது 3வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையையொட்டிய நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வந்தது. நேற்று அணை தனது முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அமராவதி ஆறு, பிரதான கால்வாய்கள் மூலம் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அமராவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டில் அமராவதி அணை 2 முறை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது 3-வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதல் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சாரலாக தொடங்கிய மழை இரவில் கனமழையாக மாறியது.

இடி, மின்னலுடன் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் குன்னூர் பஸ் நிலையம், நகராட்சி மார்க்கெட் சாலை, அருவங்காடு சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழைக்கு மலையோரங்களில் உள்ள கற்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு சாலைகளில் தேங்கியது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர்.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக மின்சாம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர். குன்னூர் தவிர சுற்றுப்புற பகுதிகளான அருவங்காடு, பிக்கட்டி, வண்ணாரப் பேட்டை, கொலக்கெம்பை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.

மாவட்டத்தின் பிற பகுதிகளான ஊட்டி, மஞ்சூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவுகிறது. குளிர் காரணமாக தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

Tags:    

Similar News