செய்திகள்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்

முகாம்களில் 1350 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் உதயகுமார்

Published On 2020-12-03 09:54 GMT   |   Update On 2020-12-03 09:54 GMT
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் 1350 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இயற்கையை கையாள்வதில் முதல்வர் இலக்கணமாக திகழ்கிறார். தமிழகத்தில் கடந்த முறை ஏற்பட்ட நிவர் புயலை சரியான முறையில் கையாண்டு உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசும், பிரதமர் மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 4,333 முகாம்கள் உள்ளது. அதில் தூத்துக்குடியில் 33 முகாம்கள் உள்ளது. இந்த நிவாரண முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 7,605 ஏரி, குளங்கள் உள்ளது. இதில் 979 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஆறு, குளங்களை கண்காணிக்க அந்தந்த நகராட்சி, உள்ளாட்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குளங்கள் நிரம்பினால் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளை இன்றும், நாளையும் அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பார்கள்.

பாம்பனில் 70 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும். எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். புயலின்போது தேவை ஏற்பட்டால் மின்சாரம் நிறுத்தப்படும்.

தற்போதைய புரெவி புயல் காரணமாக ராமநாதபுரத்தில் 44 நிவாரண முகாம்களில் 1200 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 முகாம்களில் 150 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 100 சதவீதம் கரை திரும்பி உள்ளனர்.

இதேபோல் ராமநாதபுரத்திலும் 1200 படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News