செய்திகள்
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள காந்தி சிலைக்கு வெள்ளையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்தப

உள்நாட்டு விவசாயத்திலும், வணிகத்திலும் அன்னிய ஆதிக்கம் கூடாது- வெள்ளையன் பேட்டி

Published On 2020-12-02 11:33 GMT   |   Update On 2020-12-02 11:33 GMT
உள்நாட்டு விவசாயத்திலும், உள்நாட்டு வணிகத்திலும் அன்னிய ஆதிக்கம் கூடாது என்று திருச்சி காந்தி மார்க்கெட்டை பார்வையிட்ட பின் வெள்ளையன் கூறினார்.
திருச்சி:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு வந்தார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த அனைத்து வியாபாரிகளும் ஒற்றுமையாக இருந்து தங்களது உரிமைகளுக்காக போராடியதால் வெற்றி கிடைத்திருக்கிறது. பேரவையின் திருச்சி நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டு வரை தனிப்பட்ட முறையில் சென்று வழக்கு தொடுத்து இருக்கிறார்கள்.

இந்த மார்க்கெட்டில் வியாபாரிகள் மூன்றாவது தலைமுறையாக வியாபாரம் செய்து வருகிறார்கள். இது அடுத்த தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும். காந்தி மார்க்கெட்டை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டுமே தவிர அதனை கைப்பற்றி பண முதலாளிகளின் கையில் ஒப்படைத்து விடக்கூடாது. இதற்காக எந்த போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சில்லரை வியாபாரத்திற்கு அனுமதி வழங்க அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் நடத்தி வரும் போராட்டம் வெற்றி அடையும்.

அரசின் அடக்குமுறையை முறியடித்து விவசாயிகள் வெற்றி பெறுவார்கள். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு சாதகமானது என பிரதமர் மோடி கூறியிருப்பது உண்மைக்கு மாறானது. சட்டத்தை இயற்றிய அவர்களே அதனை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதம் நடத்த வில்லை என்றால் மக்கள் எப்படி சட்டத்தை மதிப்பார்கள்.

உள்நாட்டு விவசாயத்திலும், உள்நாட்டு வணிகத்திலும் அன்னிய ஆதிக்கம் கூடாது. இவற்றில் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளை அனுமதிக்கக்கூடாது. அன்னிய சக்திகளுடன் கள்ளத் தொடர்பு வைத்து இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை தேர்தலில் வீழ்த்த வேண்டும். இதுதான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தேர்தல் நிலைப்பாடு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News